நாட்டில் எடைதூக்கும் விளையாட்டின் நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்ய, இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சிடமிருந்து ஆண்டுதோறும் ஒரு மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கீடு பெற வேண்டும் என்ற மலேசிய எடைதூக்கும் சம்மேளனத்தின் கோரிக்கைக்கு மலேசிய ஒலிம்பிக் மன்றம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது.
அண்மையில் 2026 கிளாஸ்கோவில் நிறைவடைந்த காமன்வெல்த் விளையாட்டுகளில், மலேசிய எடைதூக்கும் அணி வரலாற்றுச் சாதனை படைத்ததைத் தொடர்ந்து இந்த நிதியுதவிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் 5 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வாரிக் குவித்து மலேசிய அணி அசத்தியது. அத்துடன், காமன்வெல்த் அரங்கில் மிகச்சிறந்த திறனை வெளிப்படுத்திய ஆண்களுக்கான எடைதூக்கும் அணிக்கான மதிப்புமிக்க 'டிரபால்கர் கோப்பை' விருதையும் மலேசியா முதன்முறையாக வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் டான் ஸ்ரீ நோர்ஸா ஜக்காரியா, "அனைத்துலக அரங்கில் மலேசியாவிற்குத் தொடர்ந்து தங்கப் பதக்கங்களை உறுதி செய்யும் நம்பகமான விளையாட்டாக எடைதூக்குதல் உருவெடுத்துள்ளது" என்று பாராட்டியுள்ளார். மேலும், இந்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளவும், வீரர்களின் நலனை மேம்படுத்தி அடுத்த தலைமுறை சாம்பியன்களை உருவாக்கவும் இத்தகைய தொடர்ச்சியான நிதி அர்ப்பணிப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க நிதியையும் தாண்டி, அனைத்துலக ஒலிம்பிக் கூட்டுறவு திட்டம், ஆசிய ஒலிம்பிக் மன்றம் மற்றும் மலேசிய ஒலிம்பிக் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் மூலமாகவும் எடைதூக்கும் விளையாட்டின் மேம்பாட்டிற்கு மலேசிய ஒலிம்பிக் மன்றம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று நோர்ஸா ஜக்கரியா மேலும் உறுதி அளித்துள்ளார்








