Dec 12, 2025
Thisaigal NewsYouTube
அனைத்துலக தேச ரோபோடிக்ஸ் போட்டி: 80 பதக்கங்களைக் குவித்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் பாராட்டு
தமிழ் பள்ளி

அனைத்துலக தேச ரோபோடிக்ஸ் போட்டி: 80 பதக்கங்களைக் குவித்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் பாராட்டு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.12-

கடந்த மாதம் இறுதியில் தைவான், தைய்பேயில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான அனைத்துலக ரோபோடிக்ஸ் புத்தாக்கப் போட்டியில், உலகச் சாதனை படைத்த மலேசிய தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வாழ்த்துகளையும் பாராட்டுதலையும் பதிவுச் செய்துள்ளார்.

நமது மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு துறையில், குறிப்பாக எந்திரவியல், புத்தாக்கப் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றிருப்பது தமிழ்ப்பள்ளிகள் மீதான நம்பிக்கையை மேலும் உயர்த்தியிருக்கிறது என அமைச்சர் கோபிந்த் சிங் புகழாரம் சூட்டினார்.

நாடு AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு, இலக்கவியல், தொழில்நுட்பத்தை நோக்கி வளர்ந்து வரும் இவ்வேளையில், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் இந்தச் சாதனை ஒரு மைல்கல் ஆகும் என அமைச்சர் தெரிவித்தார்.

உலகலாவிய ரீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு கொண்ட இந்தப் போட்டியில், ஜொகூர் துன் அமீனா தமிழ்ப்பள்ளி மற்றும் பினாங்கு சுப்பிரமணிய பாரதி ஆகிய தமிழ்ப்பள்ளிகளிலிருந்து மட்டும் அல்லாது, தமிழ்ப்பள்ளிகளில் பயின்று தற்போது இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்கள் மொத்தம் 24 பேர் பதக்கம் வென்றுள்ளனர் என Syscore Academy நிறுவனத்தின் இயக்குனர் காளிதாசன் தெரிவித்துள்ளார்.

இலக்கவியல் அமைச்சின் கீழ் செயல்படும் மலேசிய இலக்கவியல் பொருளாதார நிறுவனமான MDEC அங்கீகாரத்தோடு செயல்படும் இந்த Syscore Academy நிறுவனம், இந்திய மாணவர்கள் செயற்கை நுண்ணறிவுத் துறையில் கோலோச்சுவதற்கு உறுதுணையாக இருப்பது வரவேற்கத்தக்கது என கோபிந்த் சிங் கூறினார்.

தவிர இந்திய மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காக, ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகத் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து ஊக்கமும் முழு ஒத்துழைப்பும் வழங்கி, உலகச் செயற்கை நுண்ணறிவு அரங்கில் கால் பதிக்க வைத்திருப்பது அனைவரையும் பெருமை கொள்ள வைக்கிறது.

இலக்கவியல் தொழில்நுட்பத் துறைகளில் ஆர்வம் கொள்ளும் இந்திய மாணவர்களின் முயற்சிகளையும், திட்டங்களையும் இலக்கவியல் அமைச்சு தொடர்ந்து வரவேற்பதோடு, தேவைக்கு ஏற்ப கைகொடுக்கவும் தயாராக உள்ளது என அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

Related News