ஜார்ஜ்டவுன், ஜனவரி.25-
பினாங்கின் பழமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்றான ராஜாஜி தமிழ்ப்பள்ளி, போதிய இடவசதி மற்றும் கட்டமைப்பு வசதிகள் இன்றி நீண்ட காலமாகப் போராட்டங்களைச் சந்தித்து வந்தது. இந்நிலையில், 2026-ஆம் ஆண்டு ஒரு மைல்கல்லாக, பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் தலைமையில் இப்பள்ளியின் புதிய கட்டிடத்திற்கான மகா பூமி பூஜை இனிதே நடைபெற்றது. ஆயர் ஈத்தாம் பகுதியில் ஒதுக்கப்பட்ட 2.638 ஏக்கர் நிலத்தில் இப்பள்ளி தாராள மற்றும் அடிப்படை வசதிகளுடன் அமையவுள்ளது.

பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், மாநில தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக்குழுத் தலைவருமான டத்தோ ஶ்ரீ சுந்தராஜு சோமு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஆயர் ஹீத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ங் சூன் சியாங், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங், பாயா தெருபோங் சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹொன் வாய், ஜெலுத்தோங் எம்.பி. ஆர்எஸ்என் ராயர், பினாங்கு மாநகர் மன்றத் தலைவர் டத்தோ ராஜேந்திரன், அழைக்கப்பட்ட பிரமுகர்கள், பள்ளி மேலாளர் வாரிய உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜாஜி தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டத்திற்கான பூமிபூஜை விழா மிக நேர்த்தியாக நடைபெற்றது, மிகப் பெரிய சாதனையாகும் என்று டத்தோ ஶ்ரீ சுந்தராஜு சோமு பெருமிதம் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இப்பள்ளியில் ஏற்பட்ட நீர் கசிவு போன்ற கட்டமைப்புப் பிரச்சனைகளைச் சரி செய்ய மாநில அரசு ஏற்கனவே ஒரு லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. தற்போது புதிய இடத்திற்கு மாற்றப்படுவதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியான கற்றல் சூழல் உறுதிச் செய்யப்பட்டுள்ளது என்று டத்தோ ஶ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

இந்த மாபெரும் திட்டத்தை IDEAL Group நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வான CSR திட்டத்தின் கீழ் இலவசமாக கட்டித் தர முன்வந்துள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்ப்பள்ளிகளின் முன்னேற்றத்திற்காக பினாங்கு மாநில அரசு கொண்டுள்ள அக்கறையையும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பையும் இத்திட்டம் பறைசாற்றுகிறது என்று டத்தோ ஶ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.








