Mar 9, 2026
Thisaigal NewsYouTube
150- தமிழ்ப்பள்ளிகள் மூடும் அபாயத்தில்?  - தாய்மொழிநாளில்- பெரு.அ.தமிழ்மணி  எச்சரிக்கை!
தமிழ் பள்ளி

150- தமிழ்ப்பள்ளிகள் மூடும் அபாயத்தில்? - தாய்மொழிநாளில்- பெரு.அ.தமிழ்மணி எச்சரிக்கை!

Share:

ஷா ஆலம், மார்ச் 9 – நமது தாய்மொழியை முன்னிலைப்படுத்த வேண்டுமானால், எஞ்சியுள்ள தமிழ்ப்பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டும்; அதற்கு மக்கள் தங்கள் கவனத்தைத் தாய்மொழி மீது திருப்ப வேண்டும் என்று மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் தேசியத் தலைவரும், மூத்த ஊடகவியலாளருமான 'எழுத்தாண்மை ஏந்தல்' பெரு.அ.தமிழ்மணி கேட்டுக்கொண்டார்.

நேற்று ஷா ஆலம், செக்சன் 17-ல் உள்ள மெர்போ மண்டபத்தில் நடைபெற்ற தாய்மொழி நாள் நிகழ்ச்சியில் பேருரை ஆற்றும் போது அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். இயக்கத் துணைத் தலைவர் 'தன்மானப் பெருஞ்சுடர்' த.பரமசிவம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்மணி மேலும் குறிப்பிட்டதாவது:

"மலேசியாவில் தாய்மொழிப்பள்ளிகளுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வாய்ப்பைச் சீனர்கள் 99 விழுக்காடு பயன்படுத்தி, தங்களின் பிள்ளைகளைச் சீனப்பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். ஆனால், நாமோ 50 விழுக்காடு பிள்ளைகளை மட்டுமே தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புகிறோம். இதனால் 150-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் மாணவர்கள் பற்றாக்குறையால் இழுத்து மூடும் அபாயத்தில் உள்ளன.

தொடக்கத்தில் 1,300-க்கும் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் இருந்த நிலை மாறி, இன்று எஞ்சியுள்ள 520-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். குறிப்பாக, தமிழ்ப்பள்ளிகளில் போதிக்கும் 6,000-த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களின் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை. இந்நிலை தொடருமேயானால், தாய்மொழி உணர்வு குன்றிப்போன ஒரு தலைமுறையை நாம் எதிர்கொள்ள வேண்டிய அவல நிலை ஏற்படும்" என்று முனைவர் பெரு.அ.தமிழ்மணி எச்சரித்தார்.

50-க்கும் அதிகமான தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்ட இவ்விழாவை முன்னெடுத்த இயக்கத் தலைமைச் செயலாளர் சி.மு.விந்தைக்குமரன், மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கல்வியாளர் தோழர் நீலமலர் உரையாற்றும் போது, இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைச் சிக்கல்களை விவரித்ததோடு, அக்குழந்தைகள் தமிழில் பெயரின்றித் தங்களின் சுய அடையாளத்தை இழந்து வருவதையும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, தமிழ் உணர்வாளர் தோழர் பசீர் அகமது இப்ராகிம் மற்றும் மாந்தநேய திராவிடர் கழக உதவித்தலைவர் மணியம் ஆகியோர் தாய்மொழிப் பற்றின் அவசியம் குறித்து உரையாற்றினர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த செம்மொழிப் பாடலுடன் தொடங்கிய இவ்விழா, இறுதியில் இயக்கத் துணைச்செயலாளர் பெ. கோவிந்தசாமியின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு 345,486 ரிங்கிட் மதிப்பிலான 2,433 மேசை, நாற்காலிகள் - டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கு 345,486 ரிங்கிட் மதிப்பிலான 2,433 மேசை, நாற்காலிகள் - டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு

பசுமைப் புரட்சி: மூன்று அனைத்துலக விருதுகளை வென்று பூச்சோங் மாணவர்கள் சாதனை

பசுமைப் புரட்சி: மூன்று அனைத்துலக விருதுகளை வென்று பூச்சோங் மாணவர்கள் சாதனை

அனைவருக்குமான சாரா நிதியுதவி: இன்று பிப்ரவரி 9 முதல் வழங்கப்படுகிறது - 22 மில்லியன் மலேசியர்கள் பயன் பெறுவர்

அனைவருக்குமான சாரா நிதியுதவி: இன்று பிப்ரவரி 9 முதல் வழங்கப்படுகிறது - 22 மில்லியன் மலேசியர்கள் பயன் பெறுவர்

ராஜாஜி தமிழ்ப்பள்ளியின் புதியக் கட்டிட பூமி பூஜை விழா: நீண்ட காலக் கனவு நனவானது

ராஜாஜி தமிழ்ப்பள்ளியின் புதியக் கட்டிட பூமி பூஜை விழா: நீண்ட காலக் கனவு நனவானது

புருணை சுல்தான் விரைவில் நலம் பெற மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வாழ்த்து

புருணை சுல்தான் விரைவில் நலம் பெற மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வாழ்த்து

கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் 762 புதிய மாணவர்கள்: கல்விப் பயணத்தைத் தொடங்கினர்!

கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் 762 புதிய மாணவர்கள்: கல்விப் பயணத்தைத் தொடங்கினர்!