அலோர் ஸ்டார், ஜனவரி.11-
கெடா மாநிலத்தில் 2026-ஆம் ஆண்டு பள்ளித் தொடக்கத்தின் போது, அங்குள்ள 60 தமிழ்ப்பள்ளிகளில் மொத்தம் 762 மாணவர்கள் முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளனர். அம்மாநிலத்தில் இவ்வாண்டு முதலாம் ஆண்டில் பதிந்துள்ள மொத்த மாணவர் எண்ணிக்கையான 29 ஆயிரத்து 4-இல், தமிழ்ப்பள்ளிகளின் பங்களிப்பு ஒரு குறிப்பிடத்தக்கப் பகுதியாக அமைந்துள்ளது.
அதே வேளையில், முறையான பள்ளித் தொடக்கத்திற்கு முன்னதாகவே 580 மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளில் தங்களின் பாலர் பள்ளி கல்வியைத் தொடங்கியிருப்பது வருங்காலத்திற்கான ஒரு நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். ஒட்டுமொத்தமாக கெடா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகளில் 2026இல் முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரை 5 ஆயிரத்து 822 மாணவர்கள் பயின்று வருகின்றனர் என கெடா மாநிலக் கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, 2025இல் கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் 923 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாண்டு அது சரிவைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.








