கூலிம், ஆகஸ்ட்.10-
மலேசியாவிலுள்ள 530 தமிழ்ப்பள்ளிகளில் 380 தமிழ்ப்பள்ளிகள் குறைந்த மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பது கவலை அளிப்பத்தாக பிரதமத் துறையின் சிறப்புப் பணி அதிகாரியான சண்முகன் மூக்கன் தெரிவித்தார்.

நேற்று கூலிம் மாவட்டத்தில் அதிக மாணவர்கள் பயிலும் பள்ளியான கூலிம் தமிழ்ப்பள்ளியில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் உணவு சந்தைக்குச் சிறப்பு வருகைத் தந்த சண்முகன் மூக்கன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளிகள் பல விதமான இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றது. அதற்கான பல கடிதங்களையும் பிரதமர் துறை இலாகா பெற்று வருகின்றது. அத்துடன் சில தமிழ்ப்பள்ளிகளில் மேம்பாட்டுத் திட்டத்திற்காகவும் மானியமும் விண்ணப்பித்து வருகின்றது. இவ்வனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக ஆராய்ந்து பின்பே தீர்மானங்கள் வழங்கப்பட முடியும் என்றார்.

மேலும், தமிழ்ப்பள்ளிகள் முன்னேற்றத்திற்குப் போராடுவது வரவேற்கக் கூடியவை ஆகும். இருந்த போதிலும் இப்பொழுது தமிழ்ப்பள்ளிகள் குறைந்த மாணவர்கள் பிரச்சனையை எதிர்நோக்கி வருகின்றன. இன்னும் 10 வருடங்களில் குறைந்த மாணவர்கள் இருக்கும் தமிழ்ப்பள்ளிகளின் நிலை என்னவாகும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றார் சண்முகன் மூக்கன்.

தமிழ்ப்பள்ளிகளில் எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முடிந்த வரை முன்னாள் மாணவர்கள் சங்கம் தோற்றுவிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தமிழ்ப்பள்ளிக்கும் முன்னால் மாணவர்கள் கை கொடுத்தால் பல முன்னேற்றங்கள் உருவாக்கலாம் என்றார். இந்த யுத்திகளைச் சீ பள்ளிகள் கையாண்டு வருவதாக சண்முகன் மூக்கன் எடுத்துரைத்தார். அதனை நாம் எடுத்துக் காட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக, கூலிம் தமிழ்ப்பள்ளியின் உணவுச் சந்தையை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து கடைகளைப் பார்வையிட்டார் சண்முகன் மூக்கன். இந்நிகழ்வில் கூலிம் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் ஜூலியனா, வாரியக் குழுத் தலைவர் நிக்ஷன், சிறப்பு வருகையாளராக கூலிம் பண்டார் பாருவின் மக்கள் நீதிக் கட்சியின் துணைத் தலைவர் சிவகுரு சுப்பிரமணியம் மற்றும் முன்னாள் கூலிம் பண்டார் பாருவின் மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் தே லியான் ஓங் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.