கோப்பேங், நவம்பர்.17-
பேரா, கோப்பேங் தமிழ்ப்பள்ளி பல்லாண்டுகளாக கரையான் அரிப்பால் சேதமுற்று வருகிறது. இதற்குத் தீர்வு காணும் பொருட்டு பள்ளியின் புதிய கட்டடத்திற்கு மத்திய அரசாங்கம் 14 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கோப்பேங் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கார் ஹிங் தெரிவித்துள்ளார்.

கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கார் ஹிங்கின் இந்த அறிவிப்பு கோப்பெங் வாழ் இந்தியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்பெங் தமிழ்ப்பள்ளி புதிய தோற்றத்தில் உருவாக்கம் காண்பதற்கு துணை கல்வி அமைச்சர் வொங் கா வோ நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு செய்துள்ளார் என்று சான் கார் ஹிங் சுட்டிக் காட்டினார்.

தாம் முன் வைத்த கோரிக்கைக்கு ஏற்ப மத்திய அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புதிய கட்டத்தைக் கட்டுவதற்கு விரைவில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று டான் கார் ஹிங் தெரிவித்தார்.
கோப்பேங், சிம்பாங் புலாயில் உள்ள சமூக மண்டபத்தில் நேற்று இரவு தாம் நடத்திய தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் டான் கார் ஹிங் இதனை அறிவித்தார்.

முன்னதாக தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்விற்கு வருகை புரிந்த டான் கார் ஹிங்கிற்கு நாதஸ்வர மேளதாள இசையுடன் உற்சாக வரவேற்பு நல்கப்பட்டது.
கரையான் அறிப்பால் பாதிக்கப்பட்ட 55 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட கோப்பேங் தமிழ்ப்பள்ளி புதிய கட்டடத்திற்கான நிதி 13 ஆவது மலேசியத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக டான் கார் ஹிங் தெரிவித்தார்.

இவ்வேளையில் பள்ளியின் புதிய கட்டட நிர்மாணிப்புக்கு பள்ளி நிர்வாகம், பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் ஆகியோர் தங்களின் ஆதரவையும் , ஒத்துழைப்பையும் சிறப்பாக வழங்கியதற்காக டான் கார் ஹிங் தமது பாராட்டைத் தெரிவித்துக் கொண்டார்.








