Jan 5, 2026
Thisaigal NewsYouTube
புதிய கல்வியாண்டில் மாணவர்களுக்கான தொடக்க நிதி உதவிக்கு 800 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு
தமிழ் பள்ளி

புதிய கல்வியாண்டில் மாணவர்களுக்கான தொடக்க நிதி உதவிக்கு 800 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

Share:

தைப்பிங், ஜனவரி.04-

புதிய கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தலா 150 ரிங்கிட் தொடக்க நிதி உதவிக்கு அரசாங்கம் மொத்தம் 800 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டைச் செய்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டைக் காட்டிலும் இரட்டிப்பானது என்று துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ தெரிவித்துள்ளார்.

இதன் வழி 52 லட்ச மாணவர்கள் பயன் பெறுவர் என்று குறிப்பிட்ட அவர், இன பாகுபாடின்றி அனைத்து மாணவர்களுக்கும் இம்மாதம் 12 ஆம் தேதி முதல் இந்த நிதி வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

தைப்பிங்கில் உதயமான தைப்பிங் இந்தியர் கல்வி முன்னேற்றக் கழகத்தின் முதலாவது ஆண்டுக் கூட்டத்தை நேற்று இரவு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினரான வோங் கா வோ இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக தமது உரையில், மாணவர்களின் வளர்ச்சிக்கு சமுக அமைப்புகளின் பங்களிப்பு மிக அவசியமாகும். அந்த வகையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிட தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்புக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக வோங் கா வோ புகழ்மாலை சூட்டினார்.

அரசாங்கம் இனம், மொழி, மதம் வேறுபாடின்றி அனைத்து மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி வருகிறது. இருந்த போதும் அதன் வளர்ச்சிக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு அரசு சாரா இயக்கங்கள் வழங்கி வருவது மேலும் உந்துதலை ஏற்படுத்தும் என்றார். அந்த வகையில் தைப்பிங்கில் அமைக்கப்பட்ட இந்த அமைப்புக்கு 10 ஆயிரம் ரிங்கிட் மானியம் வழங்குவதாக வோங் கா வோ அறிவித்தார்.

தைப்பிங் வட்டாரத்தில் 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ள அவற்றின் தேவைகளுக்குத் தாம் தொடர்ந்து உதவிகள் வழங்கி வருவதாகவும், அப்பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு மொத்தம் 12 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் நிதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தைப்பிங் இந்தியர் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர் வீ. பூபாலன் கூறுகையில், தங்கள் இயக்கம், இந்த ஆண்டு மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவிகள் வழங்க பல திட்டங்களைக் கொண்டுள்ள வேளையில் இயக்கம் தோன்றிய தொடக்கச் சூழலையும் விவரித்தார்.

இந்த நிகழ்வில் நகராண்மைக் கழக உறுப்பினர்களான ஆர். சுப்பிரமணியம் என்ற ரிஷி, எம். வீரன் மற்றும் எட்வர்ட் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

Related News