சிரம்பான், ஜூலை.18-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கோல பிலா, ஜெம்போல் மற்றும் ஜெலெபு ஆகிய மாவட்டங்கள் அளவிலான முத்தமிழ் விழா, கடந்த ஜுலை 9 ஆம் தேதி ஜுவாசே தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.

இதில் 3 மாவட்டங்களின் 14 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கு கொண்டனர். பேச்சு, கவிதை ஒப்புவித்தல் மற்றும் திருக்குறள் மனனம் ஆகியோர் போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த முத்தமிழ் விழாவில் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான எஸ். வீரப்பனைப் பிரதிநிதித்து அவரின் சிறப்பு அதிகாரி முரளி தங்கையா கலந்து கொண்டு நிகழ்வை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தார்.

தமிழுக்கும், தமிழ்ப்பள்ளிகளுக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் இந்த முத்தமிழ் விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து, வெற்றியடையச் செய்த பள்ளி நிர்வாகங்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலகத்திற்கும், மாநில கல்வி இலாகாவிற்கும் மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்கும் முரளி, தமது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இவ்விழாவிற்கான ஏற்பாட்டுச் செலவினத்தை ஈடு கட்டும் வகையில் ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சார்பில் மூவாயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்கப்படும் என்று முரளி அறிவித்தார்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. நெகிரி செம்பிலான் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநர் ச. சிவராஜ் , ஜெம்போல் மாவட்ட உதவி அதிகாரி பெ. பெ. குமணன், தலைமையாசிரியர்கள் மன்றத் தலைவர் எம். முரளிதரன் உட்பட பிரமுகர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.








