நீலாய், ஜூலை.20-
நீலாய் இம்பியான் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி, 2025 சுயமாகக் கற்றல் திறனில் மனக்கண்-கற்றல் கற்பித்தல் எனும் பட்டறையை அண்மையில் நடத்தியது. மாணவர்களின் நலன், பள்ளியின் பெருமை என்ற கருப்பொருளில் இப்பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மனக்கண் கணிதம் என்பது மாணவர்களின் சிந்தனைத் திறன், தீர்வுகள் எடுக்கும் திறன் மற்றும் கணிதப் பிரச்னைகளை விரைவாகக் கையாளும் திறனை மேம்படுத்தும் முக்கியமான வழிமுறையாகும். எனினும், சில மாணவர்கள் இந்த அடிப்படைத் திறன்களை முழுமையாகக் கையாள்வதில் இன்னமும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே அத்திறன்களை மாணவர்கள் தங்கள் வசப்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கவும் கணிதக் கற்றலை மீண்டும் ஆக்ககரப்படுத்தும் நோக்கிலும் அப்பட்டறை நடத்தப்பட்டது. அது மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பட்டறையை முன்னாள் ஆசிரியை திருமதி தமிழ்ச்செல்வி கணபதி நேர்த்தியாக வழிநடத்தினார். அவர் மாணவர்களுக்குப் புதுமையானக் கற்றல் அனுபவத்தை பகிர்ந்தார். மிகுந்த கடப்பாட்டுடன் அப்பட்டறையைச் சிறப்பாக நடத்திய அவருக்கு பள்ளி நிர்வாகம், பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியம் நன்றி தெரிவித்துக் கொண்டன.








