Jun 14, 2026
Thisaigal NewsYouTube
30 ஆயிரம் ரிங்கிட் மானியத்துடன் நடத்தப்படும் அரசாங்க காற்பந்துப் போட்டியை தவிர்த்த பேராக் தமிழ்ப்பள்ளிகள் – டத்தோ சிவநேசன் வருத்தம்
தமிழ் பள்ளி

30 ஆயிரம் ரிங்கிட் மானியத்துடன் நடத்தப்படும் அரசாங்க காற்பந்துப் போட்டியை தவிர்த்த பேராக் தமிழ்ப்பள்ளிகள் – டத்தோ சிவநேசன் வருத்தம்

Share:

ஈப்போ, ஜூன்.14-

பேராக் மாநில அரசாங்க ஆதரவுடன் நடத்தப்பட்ட தமிழ்ப் பள்ளிகளுக்கிடையிலான மாநில அளவிலான காற்பந்துப் போட்டியில் பள்ளிகளின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என அம்மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் மாநில அளவிலான இந்த கால்பந்து போட்டியில் இவ்வாண்டு 20 விழுக்காட்டிற்கும் குறைவான பள்ளிகள் மட்டுமே பங்கேற்றிருப்பது ஏமாற்றமளிப்பதாகவும் சிவநேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநில கல்வித் துறை இயக்குநருடன் கலந்துரையாடி சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் சிவநேசன் தெரிவித்துள்ளார்.

ஈப்போ பாடாங்கில் இன்று 18-ஆவது ஆண்டாக நடைபெற்றும் இந்த மாநில அளவிலான போட்டியை தொடக்கி வைத்த பின்னர் உரையாற்றிய சிவநேசன் மாநிலத்தில் மொத்தம் 134 தமிழ்ப்பள்ளிகளில் இவ்வாண்டு 28 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் மட்டுமே பங்கேற்றுள்ளதை சுட்டிக் காட்டினார்.

மேலும், பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் இடங்களில் இரண்டு பள்ளிகள் இணைந்து ஓர் அணியாக பங்கேற்பது வழக்கமான நடைமுறையாக இருந்தாலும், இந்த ஆண்டின் பங்கேற்பு எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது கவலைக்குரியது என்றும் சிவநேசன் குறிப்பிட்டார்.

கடந்த 2023ஆம் ஆண்டு மாநில அரசு இந்தப் போட்டிக்கு நேரடியாக ஆதரவு வழங்கத் தொடங்கிய நிலையில், அப்போது 42 அணிகள் பங்கேற்றதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த 2024-ஆம் ஆண்டு 51 அணிகளும், 2025ஆம் ஆண்டு 61ல அணிகளும் பங்கேற்றதாகத் தெரிவித்தார்.

இப்போட்டிகளுக்காக மாநில அரசாங்கம் 2023ஆம் ஆண்டு 30,000 ரிங்கிட்டும், 2024-ஆம் ஆண்டு 38,000 ரிங்கிட்டும், 2025ஆம் ஆண்டு 50,000 ரிங்கிட் மற்றும் இவ்வாண்டு, 30,000 ரிங்கிட்டும் நிதி ஒதுக்கியுள்ளதாக சிவநேசன் தெரிவித்தார்.

மேலும், ஈப்போ மாவட்டத்தில் சுமார் 14 தமிழ்ப்பள்ளிகள் இருந்தும் கூட, அவற்றில் இரண்டு பள்ளிகள் மட்டுமே போட்டியில் பங்கேற்றுள்ளதையும் சிவநேசன் சுட்டிக் காட்டினார்.

அதுமட்டுமின்றி தமது சுங்கை சட்டமன்றத் தொகுதியில் நான்கு தமிழ்ப்பள்ளிகள் இருந்த போதிலும் அதில் எந்தப் பள்ளியும் கலத்து கொள்ளாதது தமக்க பெரும் ஏமாற்றதை அளிப்பதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

அந்த நான்கு பள்ளிகளுக்கும் தேவையான உதவிகள் வழங்கி வந்த போதிலும் கூட, அதன் ஆசிரியர்கள், மாணவர்களை விளையாட்டுத் துறையில் ஊக்கப்படுத்தாததையும் சிவநேசன் சாடினார்.

இவ்வாண்டு மட்டும் இந்திய மாணவர்களுக்காக மாநில அரசாங்கம் ஒரு மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளதாக சிவநேசன் தெரிவித்தார்.

மேலும், இஸ்லாம் அல்லாத சமய விவகாரங்களுக்கான 12 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் இருந்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் கணிசமான நிதி வழங்கப்படுகின்றது.

மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமிழ்ப்பள்ளிகள் பல்வேறு உதவிகளைப் பெற்று வருகின்றன என்றும் அவர் விளக்கமளித்தார்.

இந்நிலையில், இப்போட்டியை நடத்த ஆதரவு வழங்கியவர்களுக்கும், பேராக் மாநில இந்தியர் காற்பந்து சங்கத் தலைவர் டத்தோ அமாலுடினுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்ட டத்தோ சிவநேசன், இந்த விவகாரத்தில் நிச்சயமாக சம்பந்தப்பட்ட தமிழ்ப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

Related News