Jan 21, 2026
Thisaigal NewsYouTube
300 மாணவர்களுக்குக் கல்வி நிதி உதவி வழங்கும் நிகழ்வு
தமிழ் பள்ளி

300 மாணவர்களுக்குக் கல்வி நிதி உதவி வழங்கும் நிகழ்வு

Share:

சிரம்பான், ஜூன்.01-

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கோலப்பிலா, ஜெம்புல், ஜெலுபு மாவட்டங்களில் உள்ள 13 தமிழ்ப்பள்ளிகளின் 300 மாணவர்களுக்குக் கல்வி நிதி உதவி வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை பிற்பகலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினரும், ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் எஸ். வீரப்பன் மற்றும் பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரியும், பிரதமர் துறையின் இந்திய நலப்பிரிவு இயக்குநருமான சண்முகம் மூக்கன் ஆகியோரின் சிறப்பு வருகையுடன் இந்நிகழ்வு தொடங்கியது.

பண்டார் ஸ்ரீ ஜெம்பு மாவட்ட அலுவலக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என மண்டபம் நிரம்பும் வகையில் சுமார் 600 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

பஹாவ், தாமான் டேசா புத்ரி, கிளப் வாவாசான் மஷாராகாட் மாஜூ இயக்கத்தின் தலைவரும், ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பனின் சிறப்பு அதிகாரியுமான முரளி தங்கையன் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வை வீரப்பன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய வேளையில் சண்முகம் மூக்கன் சிறப்புரையாற்றினார்.

பள்ளி விடுமுறைத் தவணைக் காலம் முடிந்த பின்னர் பள்ளி செல்லும் மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்களை வாங்கிக் கொள்வதற்கு B40 குடும்பங்களைச் 300 மாணவர்களுக்குத் தலா 70 ரிங்கிட் மதிப்புள்ள பற்றுச்சீட்டு வழங்கப்பட்டதாக ஏற்பாட்டுக் குழு பொறுப்பாளர் முரளி தங்கையன் தெரிவித்தார்.

நிகழ்விற்கு ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன் முழு ஒத்துழைப்பு வழங்கிய வேளையில் சண்முகம் மூக்கன் நிதி உதவியை ஏற்பாடு செய்து வழங்கியதாக முரளி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அதே வேளையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு பள்ளித் தலைமையாசிரியர்கள், முன்னாள் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் முழு ஒத்துழைப்பு நல்கியதாக ஜெம்புல் பிகேஆர் தொகுதியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான முரளி தனது நன்றியையும் பாரட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Related News