ஜார்ஜ்டவுன், ஜனவரி.02-
நாட்டில் அமலில் உள்ள கடுமையான குப்பை வீசுவதை தடுக்கும் சட்டங்களானது, பினாங்கு மாநிலத்தில், வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
செபராங் பிறை மாநகர் மன்றமும், பினாங்கு தீவு மாநகர் மன்றமும், தேவையான தயார் நிலைகளை உறுதிச் செய்ய வேண்டும் என்பதற்காக, கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி எடுக்கப்பட்ட இம்முடிவானது, அடுத்த 6 மாதங்களுக்குத் தள்ளி வைக்கப்படுவதாக மாநில ஊராட்சிக் குழுத் தலைவர் H'ng Mooi Lye தெரிவித்துள்ளார்.
விதிகளை மீறுவோருக்கு ஏற்ப, அபராதம் விதிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பிற விவகாரங்களை ஆய்வு செய்ய, இரு நகர் மன்றங்களும், தலா ஒரு பணிக் குழுவை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமலாக்க நடவடிக்கையின் படி, திடக்கழிவு மற்றும் பொது சுத்திகரிப்பு மேலாண்மை சட்டம் 2007, பிரிவு 672 உட்பட பல சட்டங்களில் செய்யப்பட்ட திருத்தங்களின் கீழ், கடுமையான தண்டனைகள் விதிக்கப்படவுள்ளன.
முதல் தடவை குற்றத்திற்கு 2,000 ரிங்கிட் வரை அபராதமும், 12 மணி நேர கட்டாயச் சமூகச் சேவையும் விதிக்கப்படவுள்ளது.








