Dec 1, 2025
Thisaigal NewsYouTube
பண்டார் ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளிக்கு ரிம.450,000 நிதி உதவி
தமிழ் பள்ளி

பண்டார் ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளிக்கு ரிம.450,000 நிதி உதவி

Share:

போர்ட்டிக்சன், செப்டம்பர்.03-

போர்ட்டிக்சன், லுக்குட், பண்டார் ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளியின் புதிய திறந்த வெளி மண்டபத்தை நிர்மாணிப்பதற்கு போக்குவரத்து அமைச்சரும், சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோணி லோக், YTL அறவாரியம் மூலம் ஏற்பாடு செய்த 4 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவிக்கான காசோலையை நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் J. அருள்குமார் இன்று அப்பள்ளியின் மேலாளர் வாரியத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.

பள்ளியின் மேலாளர் வாரியப் பொருளாளர் லிங்கேஸ்வரன் பழனிசாமி, லுக்குட் சட்டமன்ற உறுப்பினர் சூ கென் வா, பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கண்ணன், தஞ்சோங் துவான், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், போர்ட்டிக்சன் மாவட்ட கல்வி இலாகாவின் துணை அதிகாரி முகமட் ஸைடி முகமட் முஸ்தஃபா ஆகியோருடன் இன்று காலையில் பண்டார் ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளிக்கு நேரடி வருகை புரிந்த நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான அருள்குமார், திறந்த வெளி மண்டபம் கட்டப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலப் பகுதியைப் பார்வையிட்டார்.

பள்ளியின் தலைமையாசிரியர் யோகேந்திரன் முருகையாவும், LPS பொருளாளர் லிங்கேஸ்வரன் பழனிசாமியும் அருள்குமாருக்கு விளக்கம் அளித்தனர்.

பல்வேறு அடிப்படை வசதிகளைக் கொண்டுள்ள 385 மாணவர்கள் பயில்கின்ற பண்டார் ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளிக்கு மாணவர்களின் நடவடிக்கைகளுக்கு திறந்த வெளி மண்டபம் அவசியமானதாகும் என்று அருள்குமார் விவரித்தார்.

பள்ளி திறந்த வெளி மண்டபத்தைக் கட்டுவதற்கான முயற்சி, கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு, அருள்குமாரிடம் மனு கொடுக்கப்பட்டதாக பள்ளி மேலாளர் வாரியத்தின் பொருளாளர் லிங்கேஸ்வரன் பழனிசாமி தெரிவித்தார்.

பள்ளிக்குத் திறந்த வெளி மண்டபம் கட்டப்படுவது மூலம் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி சுற்று வட்டார மக்களும் அந்த மண்டபத்தை பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்று லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

Related News