சிரம்பான், ஜூலை.14-
2025-ஆம் ஆண்டு சிரம்பான் 1 மற்றும் சிரம்பான் 2 மாவட்ட அளவிலான செந்தமிழ் விழா கடந்த சனிக்கிழமை ஜாலான் லோபாக் தமிழ்ப்பள்ளியில் வெகுச் சிறப்பாகவும், இனிதாகவும் நடைபெற்று முடிந்தது. இவ்விழாவை சிரம்பான் 1 மாவட்டத்தைச் சேர்ந்த லோபாக் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியும் சிரம்பான் 2 மாவட்டத்தைச் சேர்ந்த சிரம்பான் தோட்ட தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியும் மிகச் சிறப்பாக ஏற்று நடத்தின.
இவ்விழா தமிழ்மொழியின் பெருமையும் பண்பாடும் மாணவர்களின் மனதில் சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டு, பல்வேறு போட்டிகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் நிகழ்வுகளுடன் சிறப்பாக நடத்தப்பட்டது.

செந்தமிழ் விழாவை மாண்புமிகு அருள்குமார் ஜம்புனாதன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். தமிழ்மொழி நம் அடையாளம் என்றும் அதனைக் கற்றுத் தேர்ந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுத் திகழ்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அதே வேளையில், பேச்சுப் போட்டி, கவிதை ஒப்புவித்தல், திருக்குறள் மனனம் செய்யும் போது தமிழ்மொழியின் சிறப்பை அறிய முடியும் என அவர் சுட்டிக் காட்டினார்.

இவ்விழாவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. சிரம்பான் 1 மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் துன் சம்பந்தன் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மு. துஷாலன் நம்பியார் முதல் பரிசை வென்றார். இரண்டாம் பரிசை கொன்வென்ட் தேசிய வகை தமிழ்ப்பள்ளி மாணவர் ச. நவின்குமார் பெற்றார். லாடாங் லெங்கேங் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியின் ஹே. மெட்நீஷ்ஷுக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.
கவிதை ஒப்புவித்தல் போட்டியில் லோபாக் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியின் ப. திவ்யபாரதியும் இரண்டாம் பரிசை துன் சம்பந்தன் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த வ. நித்யா ஶ்ரீயும் மூன்றாம் பரிசை நீலாய் இம்பியான் தேசிய வகை தமிழ்ப்பள்ளி மாணவி சு. சந்தியாவும் வென்றனர்.

பேச்சுப் போட்டியில் முதலிடத்தை கொன்வெண்ட் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியின் செ. வெனோஷாவும், இரண்டாம் பரிசை துன் சம்பந்தன் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி மாணவர் ர. சஜ்சீவனும் மூன்றாம் பரிசை லாடாங் லெங்கேங் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியின் பெ. சவித்ராவும் பெற்றனர்.
சிரம்பான் 2 மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் லாடாங் சிரம்பான் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி மாணவி கோ. மதுஷிகா முதல் பரிசை வென்ற வேளையில், இரண்டாம் பரிசு லோராங் ஜாவா தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியின் வா. தனுஷ்காவுக்கும் மூன்றாம் பரிசு லாடாங் கொம்போக் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியின் கு. நிஹாஷினிக்கும் கிடைத்தது.

கவிதை ஒப்புவித்தல் போட்டியில் முதல் பரிசை லாடாங் சிரம்பான் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த லோ. ஷவீனா தட்டிச் சென்றார். வ. கவிதாஞ்சலி இரண்டாம் பரிசைப் பெற்றார். இவர் லாடாங் கோம்போக் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி மாணவியாவர். மூன்றாம் பரிசு லாடாங் செனாவாங் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி மாணவி தி. டர்சன்யாவுக்குச் சொந்தமானது.
பேச்சுப் போட்டியில், லாடாங் செனாவாங் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி மாணவர் கு. குருதேஷ் முதல் பரிசை வென்றார். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே லாடாங் சிரம்பான் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ச. ஐங்கரனும் ரந்தாவ் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி மாணவர் இ. நட்ஷத்திரேனும் பெற்றனர்.








