ஈப்போ, டிசம்பர்.12-
குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது. மாறாக, மக்கள் அடர்த்தியாக வசிக்கின்ற பகுதிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்படும் என்று துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ உத்தரவாதம் வழங்கியுள்ளார்.
தமிழ்ப்பள்ளிகள் இடம் மாற்றம் காண்பது என்பது எளிதான காரியம் அல்ல. நிறைய சவால்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதற்கு கால தாமதம் ஏற்படும் நிலை இருப்பதாக துணை அமைச்சர் விளக்கினார்.
இன்று ஈப்போ, கம்போங் சீமியில் நடைபெற்ற மித்ரா மூலம் 50 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் 9 லட்சத்து 84 ஆயிரம் ரிங்கிட் செலவில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 83 தமிழ்ப்பள்ளிகளுக்குத் திறன் பலகைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினருமான வோங் கா வோ செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
30 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள தமிழ்ப்பள்ளிகள் மூட்டப்படும் என்று அச்சம் கொள்ள வேண்டியதில்லை. காரணம், மடானி அரசாங்கம், தமிழ்ப்பள்ளிகளை மேலும் மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட எந்தவொரு பள்ளியும் மூடப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வோங் கா வோ குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு சுங்கை சிப்புட்டில் இரண்டு் தமிழ்ப்பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதில் சுங்கை சிப்புட்டில் சுங்கை ரேலா தமிழ்ப்பள்ளி இட மற்றும் கண்ட பள்ளியாகவும், புதிய பள்ளியாக ஈவுட் தமிழ்ப்பள்ளியும் திறப்பு விழா கண்டதாக துணை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
கரையான் அரிப்பினால் சேதமுற்ற கோப்பெங் தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் நிர்மாணிக்கப்படுவதற்கு அரசாங்கம் ஒரு கோடியே 40 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தகவலையும் வோங் கா வோ பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் பேசுகையில், இன்று பேராவில் 134 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. இதில் 83 தமிழ்ப்பள்ளிகளுக்கு அதாவது 30 க்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு மட்டுமே திறன் பலகை வழங்கப்பட்டது.
எஞ்சியுள்ள பள்ளிகளுக்கு திறன் பலகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், அந்தப் பள்ளிகளுக்குத் திறன் பலகைகள் கிடைக்கவில்லை என்றால் பேரா மாநில அரசாங்கம் வழி நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.
83 தமிழ்ப்பள்களுக்கு திறன் பலகை வழங்கப்பட்டு இருப்பது மூலம், செயற்கை நுண்ணறிவு போன்ற கல்வித் திட்டங்களில் மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று நிகழ்வில் கலந்து கொண்ட பேரா மாநில தமிழ்ப்பள்ளிகள் தலைமையாசிரியர்கள் கழகத்தின் தலைவர் ஜெயக்குமார் சபாபதி தெரிவித்தார்.
கோப்பெங் தமிழ்ப்பள்ளி சார்பாக திறன் பலகைகளைப் பெற்றுக் கொண்ட அப்பள்ளியின் தலைமையாசிரியர் லோகேஸ்வரி ஆறுமுகம் கூறுகையில், தாம் தலைமையேற்றுள்ள கோப்பெங் தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து இருப்பதற்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் கோப்பெங் சுற்று வட்டார மக்கள் தங்கள் பிள்ளைகளைக் கோப்பெங் தமிழ்ப்பள்ளியில் படிப்பதற்கு ஆவணம் செய்யுமாறு தலைமையாசிரியர் லோகேஸ்வரி கேட்டுக் கொண்டார்.








