மெந்தகாப், டிசம்பர்.24-
பகாங், மெந்தகாப் வட்டாரத்தில் அமைந்துள்ள மெந்தகாப் குழுவகத் தமிழ்ப்பள்ளியின் 2025-ஆம் ஆண்டிற்கானப் பரிசளிப்பு விழா சுங் வா சீனப் பள்ளி மண்டபத்தில் கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவினை சிறப்பு வருகையாளர் டத்தோ ந. புருஷோத்தமன் நாயர் திறப்புரையாற்றி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். மேலும், மெந்தகாப் சட்டமன்ற உறுப்பினர் வூ சீ வான், சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அதோடு, பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி வாசுகி குப்பன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சரவணன் சுப்ரமணியம் மற்றும் அவர்தம் செயலவை உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் இப்பரிசளிப்பு விழாவில் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கல்வி, இணைப்பாடம் மற்றும் நன்னடத்தை போன்ற கூறுகளில் சாதனைப் பெற்ற மாணவர்களை ஊக்குவித்து அங்கீகாரம் வழங்குவதே இவ்விழாவின் தலையாய நோக்கமாகும். இவ்விழாவில் நனிச்சிறந்த கல்வியாளர் விருதுகள், சிறந்த வருகையாளருக்கான விருதுகள், குறைநீக்கல் மாணவர்களுக்கான விருதுகள் மற்றும் மாநிலம், தேசியம், பன்னாட்டு அடிப்படையிலான விருதுகள் இணைப்பாட விருதுகள் என பல பிரிவுகளில் மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், இந்நிகழ்ச்சியில் பல்லூடகப் படைப்புகள், பாரம்பரிய நடனங்கள், மலாய் ஓரங்க நாடகம் மற்றும் கதையும் கானமும் போன்ற அங்கங்களில் மாணவர்கள் தங்களின் தன்னாளுமையை வெளிப்படுத்தி வருகையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர். பள்ளியின் தலைமையாசிரியை திருமதி வாசுகி குப்பன் தனதுரையில் கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கைகளில் மணவர்களின் ஈடுபாடு, ஒழுக்கம், மாணவர்களின் பள்ளி வருகை, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சாதனைகள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு ஆகியவை பள்ளியின் வெற்றிக்கு வித்திடும் காரணங்களாகும் என்றார்.

மேலும், இந்நிகழ்ச்சியினை மெருகூட்டும் வண்ணம் அதிர்ஷ்டக் குலுக்கள் அங்கத்தில் தொடர்பு சாதனம், மின்னியல் சாதனங்கள் மற்றும் இதர சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இவ்விழாவின் இறுதியில், மாணவர்களை உற்சாகப்படுத்த ஆறாம் ஆண்டு மாணவர்களுக்குச் சில சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.









