ஜார்ஜ்டவுன், நவம்பர்.18-
பினாங்கு மற்றும் மலேசியா முழுவதும் உள்ள இந்திய மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஓர் ஊன்றுக்கோலாக மலேசியாவிலே பினாங்கில் முதல் தமிழ் இடைநிலைப்பள்ளி நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையைப் பினாங்கு சட்டமன்றத்தில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் முன் வைத்துள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான தமிழ் ஆரம்பப்பள்ளியைக் கொண்ட மாநிலங்களில் பினாங்கும் ஒன்றாகும். பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் ஆரம்பக் கல்வியை முடித்து, இடைநிலைப்பள்ளிக்குச் செல்கின்றனர். இடைநிலைக்குச் செல்லும் போது ஏற்படும் கற்றல் கற்பித்தல் மாற்றங்கள் இந்திய மாணவர்களின் கல்விச் செயல்திறனையும் அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களையும் அதிகரிக்கின்றன.
அதுவும் குறிப்பாக, மலாய், அறிவியல், கணிதப் பாடங்களில் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்படுவதோடு பி40 குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் விடுபடும் அபாயம் அதிகரிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
அதன் அடிப்படையில் தமிழ் இடைநிலைப் பள்ளி நிறுவுவது இடைநிலைக் கல்விக்கான அணுகளை இன்னும் விரிவான சமத்துவத்தை உறுதிச் செய்வதற்கான ஒரு தேவையாக அமையும் என்று குமரன் கிருஷ்ணன் கூறினார்.
எனவே தமிழ் இடைநிலைப்பள்ளியைப் பினாங்கில் நிறுவுவதற்குக் கல்வி அமைச்சு அங்கீகரிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை பினாங்கு மாநில அரசு அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று குமரன் கிருஷ்ணன் வலியுறுத்தினார்.
அவ்வாறு தமிழ் இடைநிலைப்பள்ளி ஒன்றை பினாங்கில் நிறுவதற்கான நிலை ஏற்படுமானால் வரலாற்றுச் சாதனைகளை முறியடிக்கும் வண்ணம் மலேசியாவின் முதல் தமிழ் இடைநிலைப் பள்ளிக்கான முன்னோடியான இடமாக பாகான் டாலாமில் இடம் ஒதுக்கீடு செய்யத் தாம் தயாராக இருப்பதாக குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.








