கோலாலம்பூர், டிசம்பர்.09-
மடானி கல்வித் திட்டத்தின் வாயிலாாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமிழ்ப்பள்ளிகள், தமிழ்ப்பள்ளி பாலர் பள்ளிகள் மற்றும் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நலன் சார்ந்த விவகாரங்களுக்கு அதீத முக்கியத்துவத்தையும் முன்னுரிமையையும் வழங்கி வருவதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.

இலவச டியூஷன், Tvet கல்வி மற்றும் மித்ரா வாயிலாக மென்பொருள் பயிற்சி உட்பட பல வகையான திட்டங்களைத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக மடானி அரசாங்கம் அமல்படுத்தி வருகிறது. தமிழ்ப்பள்ளி, மாணவர்களின் நலனில் தீவிர கவனம் செலுத்தி வரும் மடானி அரசாங்கம் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்த வேண்டாம் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் விகோகானந்தா தமிழ்ப்பள்ளியில் இன்று பிற்பகலில் நடைபெற்ற கூட்டரசு பிரதேசத்தைச் சேர்ந்த 15 தமிழ்ப்பள்ளிகள் மற்றும் சிலாங்கூர் மாநிலத்தை சேர்ந்த 10 தமிழ்ப்பள்ளிகளுக்கு Smart Board எனும் திறன் பலகை வழங்கும் நிகழ்விற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஶ்ரீ ரமணன் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் மற்றும் துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ ஆகியோருடன் இணைந்து டத்தோ ஶ்ரீ ரமணன் திறன் பலகை வழங்கும் நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பின்னடைவைச் சந்திக்கக் கூடாது என்ற அடிப்படையில் புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாக டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

கெட்டதைப் பற்றி பேசுகின்றவர்கள், தமிழ்ப்பள்ளிகளுக்கு மடானி அரசாங்கம் எடுக்கக்கூடிய நல்ல விஷயங்களையும் பேச வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் முதல் கட்டமாக சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகளுக்கு டத்தோ ஶ்ரீ ரமணன் தலைமையில் திறன் பலகை வழங்கப்பட்டது.








