ஜார்ஜ்டவுன், அக்டோபர்.31-
பினாங்கு, ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் புத்தாக்க ஆய்வகத்தை பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், மாநில தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவருமான டத்தோ ஶ்ரீ சுந்தராஜு சோமு இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பகான் டாலம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணனும் கலந்து சிறப்பித்தார்.

மாணவர்களிடையே புதுமை, படைப்பாற்றல் மற்றும் STEM கற்றல் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதில் புத்தாக்க ஆய்வகத்தை நிறுவுவது ஒரு முக்கியமானப் படியாகும். இந்த ஆய்வகம் 21 ஆம் நூற்றாண்டின் திறன்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும், படைப்பு நடவடிக்கைகள் மற்றும் நடைமுறை சோதனைகள் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகத்தை ஆராய்வதற்கான இடத்தை வழங்குவதற்கும் ஒரு தளமாக இருக்கும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த ஆய்வகத்தை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து டத்தோ ஶ்ரீ சுந்தராஜு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினருமான குமரன் கிருஷ்ணன், மாணவர்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக பிரம்படி முறை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் பகான் எம்.பி. லிம் குவான் எங்கும் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.

பிரம்படித் தண்டனை முறை என்பது தண்டிக்கும் நோக்கம் கொண்டதல்ல, மாறாக , மாணவர்களின் கட்டொழுங்கை வளப்படுத்தவும், கற்றல் திறனை மேம்படுத்தவும் இது பெரிதும் உதவும் என்று குமரன் கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

பினாங்கில் உள்ள STEM கல்வியை மேம்படுத்துவதில் மற்ற பள்ளிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது. இப்பள்ளியின் சிறந்த முயற்சிக்கு குமரன் தமது வாழ்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

டத்தோ ஶ்ரீ சுந்தராஜுவின் இந்த வருகையின் போது மாணவர்களின் படைப்புத் திறன் வெளிப்படுத்தப்பட்டது. ஆய்வகத்தின் வசதிகள் குறித்தும் பள்ளித் தலைமையாசிரியர் விளக்கம் அளித்தார்.








