பினாங்கு மாநிலத்திலுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளின் கல்வி வளர்ச்சிக்காக, மாநில அரசு 2.42 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. ‘பினாங்கு 2030’ தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், மாணவர்களின் டிஜிட்டல் அறிவு மற்றும் STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயோ தெரிவித்தார்.
மேலும், திறன் மேம்பாடு மற்றும் தரமான கல்வி மூலம் மக்களுக்கு அதிகாரமளித்தலை வலியுறுத்தும் பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வையுடன் இந்த முன்முயற்சி திட்டம் அமைகிறது என்று முதலமைச்ச்ர் குறிப்பிட்டார்.
கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை என்ற கொள்கையை மாநில அரசு வலியுறுத்துகிறது. தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் மாநிலத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றும் ஆற்றல்மிக்க தலைமுறையாக உருவாக வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தினார்.
நேற்று பினாங்கு, கோம்தார் அரசு செயலக கட்டட மண்டபத்தில் பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகள், பாலர் பள்ளிகள், 3 பஞ்சாபிப் பள்ளிகள் மற்றும் தெலுங்கு சங்கத்திற்கு மொத்தம் 2.42 மில்லியன் ரிங்கிட் நிதி உதவி வழங்கும் நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றுகையில் சாவ் கோன் இயோ இதனை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் சிறப்பு நடவடிக்கைக்குழுத் தலைவருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகளை விளக்கினார். குறிப்பாக, மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்தும் வகையில், பள்ளிகளில் உள்ள பழைய நாற்காலிகள் மற்றும் மேசைகளை மாற்றும் பணிகள் தற்பொழுது துரிதமாக நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
"வரும் 2027-ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் புதிய மேசை, நாற்காலிகள் வழங்கப்பட்டிருக்கும் என்றும், அதோடு, எதிர்காலத்தில் அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளும் தமக்கெனச் சொந்த நிலத்தைப் பெற வேண்டும் என்பதே எமது இலக்கு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தவிர பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்பை கோரிய டத்தோஸ்ரீ சுந்தராஜு, அடுத்த ஆண்டில் அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் வழிபாட்டு மேடைகள் அமைக்கப்பட்டிருக்கும்" என்றும் உறுதி அளித்தார்.
இந்நிகழ்வில் பினாங்கு துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ, பினாங்கு தமிழ்ப்பள்ளிகள் சிறப்பு நடவடிக்கைக்குழு துணைத் தலைவர் குமரன் கிருஷ்ணன்,ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு, தங்கள் பள்ளிகளுக்கான மானியத்தை பெற்றுக்கொண்டனர்.













