ஜார்ஜ்டவுன், நவம்பர்.18-
பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும், 14 மழலையர் பள்ளிகளுக்கும் கற்றல்- கற்பித்தல் தரத்தை மேம்படுத்துவதற்கு இவ்வாண்டு மட்டும் 2.3 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது என்று பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு சோமு, மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
பினாங்கு மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு நடவடிக்கைக் குழுத் தலைவர் என்ற முறையில் தமது தலைமையிலான குழுவினரின் அங்கீகாரத்துடன் 28 தமிழ்ப்பள்ளிகள் மற்றும் 14 மழலையர் பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒருங்கிணைப்பு நடவடிக்கையாக இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக பினாங்கு சட்டமன்றத்தில் பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் எழுப்பிய கேள்விக்கு டத்தோ ஶ்ரீ சுந்தராஜு மேற்கண்டவாறு பதில் அளித்தார்.
பினாங்கு மாநிலத்தின் 15 ஆவது சட்டமன்றக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது, பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகள் மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் அவர்களின் நலன் சார்ந்த கல்வி கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு பினாங்கு மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு நடவடிக்கைக் குழுவின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது என்பது குறித்து குமரேசன் ஆறுமுகம் வினவினார்.
காலனித்துவ காலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக தோட்ட நிர்வாகத்தின் கீழ் தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வந்தன என்பது வரலாறாகும். இருப்பினும், தோட்டத்தொழில் நலிவுற்ற பின்னர் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு நடவடிக்கைக் குழு பினாங்கில் தோற்றுவிக்கப்பட்டதாக டத்தோ ஶ்ரீ சுந்தராஜு விளக்கினார்.
தமிழ்ப்பள்ளிகளுக்கு வருடாந்திர சிறப்பு மானியத்தை ஒதுக்கீடு செய்த முதலாவது மாநிலமாக பினாங்கு விளங்குகிறது என்பதையும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு தெளிவுபடுத்தினார்.
பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளும் 100 விழுக்காடு ஸ்மார்ட்போர்ட் வசதிகளைக் கொண்டு இருப்பதுடன் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரண மாநிலமாக பினாங்கு விளங்குகிறது என்று டத்தோ ஶ்ரீ சுந்தராஜு குறிப்பிட்டார்.
தமிழ்ப்பள்ளிகளின் கற்றல், கற்பித்தல் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மட்டுமின்றி பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரிகள் ஆகியோருக்கு சிறப்புப் பயிற்சிகளையும் தனது தலைமையிலான சிறப்புக் குழுவினர் ஏற்பாடு செய்து இருப்பதையும் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு தமது உரையில் சுட்டிக் காட்டினார்.








