Nov 9, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிப் பேருந்து கட்டண உதவித் தொகை: பாப்பாராய்டு வழங்கினார்
தமிழ் பள்ளி

சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிப் பேருந்து கட்டண உதவித் தொகை: பாப்பாராய்டு வழங்கினார்

Share:

ஷா ஆலாம், நவம்பர்.08-

சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மாநில அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான பள்ளிப் பேருந்து கட்டண உதவித் தொகை ஒப்படைப்பு நிகழ்வு, ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு தலைமையில் இன்று ஷா ஆலாம், சுல்தான் அப்துல் அஜிஸ், ஜுப்லி பேரா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில பொருளாதாரத் திட்டமிடல் பிரிவின் உதவித் தலைமை இயக்குநர் புவான் ஸுராய்னி ஹாருன் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய பாப்பாராய்டு, சிலாங்கூர் மாநில வளர்ச்சி நீரோடையில் எந்தவொரு சமூகமும் ஓரங்கட்டப்படாது என்பதற்கு அவர்களுக்கு வழங்கப்படட்டு வரும் இத்தகைய அனுகூலங்கள் சிறந்த உதாரணமாகும் என்றார்.

குறிப்பாக, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இந்தியர்களின் மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருவதாக பாப்பாராய்டு குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தின் மேம்பாட்டிற்கு நிகராக கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூகவியல் திட்டங்களில் இந்திய சமுதாயத்தின் அடைவு நிலையை வலுப்படுத்துவதற்கு அவர்களுக்கான உதவித் திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்துப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்க உயர்க்கல்விக்கூடங்கள் மற்றும் தனியார் உயர்க்கல்விக்கூடங்கள் ஆகியவற்றில் பயின்று வரும் இந்திய மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு 1.2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு, B40 தரப்பைச் சேர்ந்த 486 மாணவர்கள் பலன் பெற்று இருப்பதாக பாப்பாராய்டு சுட்டிக் காட்டினார்.

தவிர தீபாவளி ஷாப்பிங்கிற்கு வவுச்சர் வழங்கும் திட்டத்திற்கு 4.43 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது. இதன் வழி இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த 22 ஆயிரத்து 150 பெறுநர்கள் நன்மை பெற்றனர்.

சிலாங்கூரில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்பு, சீரமைப்பு மற்றும் கட்டட வசதி தரத்தை உயர்த்துவதற்கு 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.

I – SEED எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில்முனைவர்களுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கு ஒரு மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு, 146 இந்திய தொழில்முனைவர்கள் பலன் பெற்றுள்ளதாக பாப்பாராய்டு சுட்டிக் காட்டினார்.

தவிர மாநிலத்தில் உள்ள 141 இயக்கங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.

இன்று தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிப் போக்குவரத்துக்கு பேருந்து கட்டணமாக மாநிலத்தில் உள்ள 98 பள்ளிகளைச் சேர்ந்த 3,447 மாணவர்களுக்கு மொத்தம் பத்து லட்சத்து 34 ஆயிரத்து 100 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு நிதிச் சுமை குறையக்கூடும் என்று பாப்பாராய்டு நம்பிக்கை தெரிவித்தார்.

Related News