கோலாலம்பூர், அக்டோபர்.28-
கடந்த 20 வருடங்களாக பெரும் நெருக்கடியை எதிர்நோக்கிய பகாங், குவாந்தான், ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்திய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும், அதற்கு உறுதுணையாக இருந்த இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவிற்கும், ஜெலுத்தோங் எம்.பி. ஆர்எஸ்என் ராயர், நேற்று நாடாளுமன்றத்தில் இந்திய சமுதாயம் சார்பில் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஆர்எஸ்என் ராயர், 2026 ஆண்டு பட்ஜெட்டில் இந்திய சமூகத்திற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு பிரதமருக்கு முதலில் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக பகாங், ஜெராம் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள், பள்ளி கட்டட வசதியின்றி, கடந்த 20 ஆண்டுகளாக கண்டெய்னர்களில் கல்வி பயின்று வந்தனர்.
அந்த தமிழ்ப்பள்ளி மாணவர்கள், ஒரு நல்ல சூழலில் கற்றல், கற்பித்தலைத் தொடர்வதை உறுதிச் செய்வதற்கு புதிய கட்டடம் நிர்மாணிக்கப்படுவதற்கு 2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கீட்டை பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் அங்கீகரித்து இருப்பது, ஒரு 20 ஆண்டு காலப் பிரச்னையை பிரதமர் தலைமையிலான மடானி அரசாங்கத்தால் மட்டுமே தீர்க்க முடிந்தது என்று ஆர்எஸ்என் ராயர் புகழாரம் சூட்டினார்.
அரசாங்கத்தில் இந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கின்ற அமைச்சர் என்ற முறையில் டாமன்சாரா எம்.பி. கோபிந்த் சிங் டியோவிற்கும் இவ்வேளையில் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஆர்எஸ்என் ராயர் தமது உரையில் குறிப்பிட்டார்.








