பெய்ஜிங்: சீனாவில் நேற்று நள்ளிரவில் 7.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு பல வீடுகள் சேதமடைந்த நிலையில் பொதுமக்கள் காயமடைந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் என்பது ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் என்பது அடிக்கடி ஏற்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் நேற்று நள்ளிரவில் சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் என்பது டெல்லி என்சிஆர் பகுதியிலும் உணரப்பட்டது.
அதாவது சீனாவின் தெற்கு பகுதியில் ஜின்ஜியாங் மாகாணம் உள்ளது. இங்கு தான் நேற்று நள்ளிரவு 11.39 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வீடுகள் குலுங்கி உள்ளன. இதனால் வீட்டில் தூங்கிய மக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்து பொதுவெளியில் தஞ்சமடைந்துள்ளனர். இதையடுத்து உடனடியாக மீட்பு படையினர், போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்றனர்.
அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் குலுங்கியதோடு, உருண்டு விழுந்ததாக சிலர் தெரிவித்தனர். மேலும் சில இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளது. வீடுகளில் விரிசல் என்பது ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சிலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சீனா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 27 ரயில்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக நிறுத்தப்பட்டது.