Oct 9, 2026
Thisaigal NewsYouTube

வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 6 மாதச் சிறைத் தண்டணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு 6 மாதச் சிறைத் தண்டணை

டாக்கா, ஜூலை.03-

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் ஆறு மாதச் சிறைத் தண்டனை விதித்தது. 72 வயதான ஷேக் ஹசீனா, கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர் போராட்டத்தில் பதவியை இழந்து, இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.

தற்போது, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தில் ஆட்சியில் இருக்கிறது. புதிய அரசு அமைந்தவுடன் ஷேக் ஹசீனா மீது ஏராளமான வழக்குகள் பதிந்துள்ளது.

இந்நிலையில், ஷேக் ஹசீனா மற்றும் தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பான வங்கதேச சாத்ரா லீக் தலைவர் ஷகில் அகண்ட் புல்புல் இடையேயான தொலைபேசி உரையாடல் பதிவு கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் வெளியானது.

அதில், 'என் மீது 227 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, எனவே 227 பேரைக் கொல்ல எனக்கு உரிமம் கிடைத்து விட்டது' என ஷேக் ஹசீனா கூறியிருந்தார். இதற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்ற தீர்ப்பாயத்தில் தலைமை வழக்கறிஞர், இந்த ஆடியோவை அடிப்படையாக வைத்து ஷேக் ஹசீனா மற்றும் ஷாகில் புல்புல் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த சர்வதேச குற்ற தீர்ப்பாயம் 2010ல் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவால் மீண்டும் தொடங்கப்பட்டது. அவர் தொடங்கிய அமைப்பே அவருக்கு எதிராக விசாரணை நடத்தியது. அவர் பேசியதாகக் கூறப்பட்ட ஆடியோ தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் ஆடியோவில் உள்ள குரல் ஷேக் ஹசீனாவுடையது என உறுதியானது. இதையடுத்து ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனையும், அவருடன் பேசிய ஷாகில் புல்புலுக்கு இரண்டு மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →