இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 பேர் அந்நாட்டின் ராணுவ வீரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ராவல்பிண்டியை நோக்கி பேருந்து வந்துக்கொண்டிருந்தபோது கில்கிட்-பால்டிஸ்தானில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. இது குறித்து டயமர் காவல் கண்காணிப்பாளர் சர்தார் ஷெஹ்ரியார் கூறுகையில், "நேற்று பயணிகள் பேருந்தின் மீது திடீரென எதிர்பாராத தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். எனவே பேருந்து கட்டுப்பாட்டை மீறி எதிரே வந்த லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்திருக்கிறது. இதில் லாரி ஓட்டுநரும் உயிரிழந்துள்ளார்.
மொத்தம் 8 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 2 பேர் எங்கள் நாட்டின் ராணுவ வீரர்கள். மற்றவர்களில் 5 பேர் வரை தற்போது அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்புக்குழு அமைக்கப்படும்" என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் நாடு முழுவதும் 99 பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.