கட்மாண்டு, செப்டம்பர்.16-
நேபாளத்தில் 3 அமைச்சர்களை அந்நாட்டின் பிரதமர் சுசிலா கார்கி நியமித்துள்ளார். சமூக ஊடகங்களுக்கு விதித்த தடையால் நேப்பாளத்தில் கலவரமும், வன்முறையும் வெடித்தது. அந்நாட்டின் பிரதமர் சர்மா ஒலி நாட்டை விட்டே வெளியேறும் அளவுக்கு நிலைமை விபரீதமானது.
பார்லிமென்ட் கலைக்கப்பட்டு, இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுசீலா கார்கி நியமிக்கப்பட்டார். அந்நாட்டின் முதல் பெண் பிரதமரான அவர் தற்போது அமைச்சர்களை நியமித்து வருகிறார்.
அதன்படி, நிதி அமைச்சராக முன்னாள் நிதித்துறை செயலாளர் ரமேஷ்வோர் கானல், உள்துறை அமைச்சராக வழக்கறிஞர் ஓம்பிரகாஷ் ஆர்யல், எரிசக்தி, நீர்வளம், பாசனத்துறை அமைச்சராக கல்மான் கிசிங் ஆகியோரை இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி நியமித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் அதிபர் மாளிகையில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். 3 பேருக்கும் அதிபர் ராம்சந்திரா பவுடெல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இடைக்கால அரசில் மொத்தம் 15 அமைச்சர்களை மட்டுமே நியமிப்பது என்று பிரதமர் சுசீலா கார்கி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. நாட்டில் இயல்பு நிலை, பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் ஆகிய பிரச்னைகளுக்கு அமைச்சர்கள் அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.