வாஷிங்டன், மே.19-
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் அதிபர் பதவியில் இருந்து விலகிய, ஜோ பைடன், தற்போது, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். அண்மையில் அவருக்கு உடல்நலம் அதிகமாகப் பாதிக்கப்பட்டது. தற்போது அவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த புற்றுநோய், கிளிசன் ஸ்கோர் ஒஃப் 9 என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது நோயின் தீவிரத்தைக் குறிக்கிறது. ஜோ பைடனும், அவரது குடும்பத்தினரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.
ஜோ பைடனின் அண்மைய மருத்துவ நோயறிதலைப் பற்றி அறிந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருத்தம் தெரிவித்துள்ளார். ஜோ பைடன் விரைவாகவும், வெற்றிகரமாகவும் குணமடையப் பிரார்த்திப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.








