சிங்கப்பூர், ஆகஸ்ட்.09-
அண்டை நாடான சிங்கப்பூரின் 60 ஆவது தேசிய தினம் இன்று ஆகஸ்ட் 9 ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
சிங்கப்பூர் தனிச் சிறப்புடன் திகழ ஒற்றுமை, உறுதிப்பாடு, செயல் ஆகிய அனைத்தும் முன் எப்போதும் இல்லாத அளவு வலிமையாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங் தமது தேசிய தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மாற்றங்கள் அதிவேகமாகவே இருக்கும் என்றும், சிரமமாகக்கூட சில சமயங்களில் இருக்கும் என்றும் கூறிய பிரதமர் லாரன்ஸ் வோங், எவரும் தனித்து அந்தச் சவால்களைச் சந்திக்க வேண்டியதில்லை என்று நம்பிக்கையளித்தார்.
கடந்த 60 ஆண்டுகளைப் போல, அரசாங்கம் சிங்கப்பூர் மக்களுக்குத் துணை நிற்கும். பின்தங்கியுள்ள ஒவ்வொரு சிங்கப்பூரரும் தன்னம்பிக்கையுடன் போராடத் துணை நிற்போம் என்று லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
எதிர்வரும் சிரமமான சூழலைக் கண்டு மனந்தளரப் போவதில்லை என்றும் புதிய சவால்களைத் தனித்துவமான வழியில் எதிர்கொள்வோம் என்றும் நேற்றிரவு ஆற்றிய சிங்கப்பூர் தேசிய தின வாழ்த்துச் செய்தியில் லாரன்ஸ் வோங் அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்.