புதுடில்லி, நவம்பர்.14-
டில்லி கார் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த இரு மருத்துவர்கள் உட்பட மேலும் 5 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
டில்லியில் கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக காஷ்மீர் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்த அதீல் மற்றும் முசம்மில் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றிய மற்றொரு மருத்துவரான உமரும் காஷ்மீரில் பணியாற்றி வந்துள்ளார். அதே போல், இந்த குண்டு வெடிப்பில் பெண் மருத்துவர் ஒருவருக்கும் மேலும் இரண்டு மருத்துவர்களுக்கும் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் நான்கு பேரும், டில்லி அருகே பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியது தெரிய வந்ததை அடுத்து அந்த பல்கலைக்கழகப் புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டில்லி குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காஷ்மீரைச் சேர்ந்த இரு மருத்துவர்கள் உட்பட மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது 5 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்காக டில்லி அழைத்துச் சென்றுள்ளனர்.








