விக்டோரியா, ஆகஸ்ட்.26-
ஆஸ்திரேலியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீசார் 2 பேர் கொல்லப்பட்டனர். பாலியல் வழக்கில் வாரண்ட் கொடுக்கச் சென்ற போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மெல்போர்ன் அருகில் உள்ள விக்டோரியா பகுதியில் போரேபுன்கா என்ற சிறிய நகரம் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட வாரண்ட் ஒன்றை வழங்க அந்நாட்டு போலீசார் சென்றனர்.
அப்போது எங்கிருந்தோ மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். இதில் வாரண்ட் நகலை ஒட்டச் சென்ற போலீசாரின் மீது குண்டு பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை அங்குள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கியால் சுட்ட நபர் எங்கிருந்து சுட்டுள்ளார் என்பது தெரியவில்லை. அவரைத் தேடும் பணியில் போலீசார் குழுக்களாக இறங்கி இருக்கின்றனர். துப்பாக்கியுடன் மர்ம நபர் காணப்படுவதால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே நடமாட வேண்டாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
சம்பவ பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் இருந்து யாரும் வெளியேற வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக போலீஸ் உயரதிகாரிகள் கூறி இருக்கின்றனர்.