புதுடெல்லி, ஜூலை.18-
இந்திய ராணுவம், லடாக்கில் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பு முறையை வெற்றிகரமாகப் பரிசோதித்திருக்கிறது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரம் சீனா, இந்தச் சோதனையைக் கவலைக்குரியதாகப் பார்க்கும் என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் விமானப் பாதுகாப்பு திறன்களுக்கு ஒரு முக்கிய ஊக்கமாக, இந்திய ராணுவம் நேற்று உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆகாஷ் பிரைம் தரை-வான் ஏவுகணை அமைப்பு முறையின் உயர் சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.
இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், "இந்த ஏவுகணைகள் அரிதான வளிமண்டலத்தில் வேகமாக நகரும் வான் இலக்குகளை இருமுறை நேரடியாகத் தாக்கி, தீவிர நிலைமைகளில் அமைப்பு செயல்திறனை நிரூபித்துள்ளன என்றார்.
ஆகாஷ் பிரைம் ராணுவத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது ஆகாஷ் ரெஜிமெட்களின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்படும்.
இந்த அமைப்பு, ஏற்கனவே ஆபரேஷன் சிந்துரின் போது தனது செயல்பாட்டு வெற்றியை நிரூபித்துள்ளதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








