கோலாலம்பூர், நவம்பர்.16-
மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாய்லாந்து பிரதமர் Anutin Charnvirakul, கம்போடியப் பிரதமர் Hun Manet என நான்கு முக்கியத் தலைவர்கள் நடத்திய உயர் மட்டத் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்த இரு நாடுகளும் மீண்டும் உறுதியளித்துள்ளன. அண்மையில் ஏற்பட்ட கண்ணிவெடி வெடிப்பைத் தொடர்ந்து தாய்லாந்து தற்காலிகமாக இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த நிலையில், இந்தப் புதிய உறுதிமொழி ஒரு முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. வர்த்தக ஒத்துழைப்பைப் பாதிக்காமல், இரு நாடுகளின் எல்லையிலும் புதைந்துள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதில் அர்த்தமுள்ள முன்னேற்றம் காணப்பட வேண்டும் என்று இந்த நான்கு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த அமைதிப் பேச்சு வார்த்தையில் மலேசியா 'மறைந்த கர’மாகச் செயல்படுகிறது என்ற முன்னாள் தாய்லாந்து மேஜர் ஜெனரல் Rangsi Kitiyansap-இன் குற்றச்சாட்டுகளைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆவேசமாக மறுத்தார். தாய்லாந்துப் பிரதமர் ஒரு போதும் மலேசியாவின் நடுநிலைப் பங்கைக் கேள்வி எழுப்பவில்லை என்றும், தாய்லாந்துக் கைதிகளை விடுவிப்பதில் கம்போடியா முழுமையாக உடன்படாததே தற்காலிகத் தடைக்குக் காரணம் என்றும் அன்வார் விளக்கமளித்தார். எவ்வாறாயினும், இந்தப் பூசல் முடிவுக்கு வந்த நிலையில், அமைதியை நிலைநாட்டுவதில் டிரம்ப்பின் தனிப்பட்ட பங்களிப்புக்கு அன்வார் நன்றி தெரிவித்தார்.








