மலேசியாவில் மீண்டும் மீண்டும் ஏற்படும் எல்லை தாண்டிய புகைமூட்டம் தொடர்பாக, ஆசியா அமைப்பில் இந்தோனேசியாவை ஒதுக்கப்பட்ட நாடாகக் கருத வேண்டும் என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் கூறியதற்கு, இந்தோனேசியாவின் முன்னாள் வர்த்தக அமைச்சர் முஹமட் லுஃப்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த புகைமூட்டப் பிரச்சினையை அரசியல் ஆதாயம் தேடும் வாய்ப்பாக சையிட் சாடிக் பயன்படுத்தக்கூடாது என்று லுஃப்டி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் இந்தோனேசிய தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், லட்சக்கணக்கான இந்தோனேசிய மக்கள் புகையைச் சுவாசித்து வருவதையும் லுஃப்டி சுட்டிக் காட்டியுள்ளார்.
அதேவேளையில், இந்தோனேசியாவில் செயல்படும் மலேசியத் தோட்ட நிறுவனங்களும் இந்தப் பிரச்சினைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியத் தோட்ட நிறுவனங்கள் இந்தோனேசியாவில் சுமார் 34 லட்சம் ஹெக்டேர் நிலத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், சில நிறுவனங்கள் மலேசிய வங்கிகள் மூலம் தங்களது தொழிலுக்கு நிதி பெறுவதாகவும் லிஃப்டி கூறியுள்ளார்.








