ஜப்பானின் தோக்கியோ, ஹனேடா விமான நிலையத்தில், காலணிகளுக்குள் மறைத்து கொக்கைன் போதைப்பொருளைக் கடத்த முயன்றதாக ஐந்து மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 32 லட்சம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பான் ஊடகமான என்எச்கே வோர்ல்ட் ஜப்பான் வெளியிட்ட தகவலின்படி, கைது செய்யப்பட்ட ஐவரில் நால்வர் போதைப்பொருள் கடத்த முயன்றதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஒருவர் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
விமான நிலையத்தில் சோதனை நடத்திய ஜப்பான் சுங்கத்துறை அதிகாரிகள், ஐவரின் காலணிகளின் அடிப்பகுதியில் உள்ள உள் அடுக்குகளுக்குக் கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கைனைக் கண்டுபிடித்துள்ளனர்.
சமூக ஊடகம் மூலம் அறிமுகமான ஒருவர், வெளிநாட்டுக்குப் போதைப்பொருளைக் கொண்டு செல்லப் பணம் வழங்கியதாக கைதானவர்களில் ஒருவரான முஹமட் டானியல் ஃபார்ஹான் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்தக் கடத்தலில் அனைத்துலக போதைப்பொருள் கும்பலுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்து ஜப்பான் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.








