மலேசியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள எகிப்து அதிபர் அப்டேல் ஃபாத்தா எல்-சிசிக்கு கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாரா அரண்மனையில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹீம் தலைமையில் அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று சனிக்கிழமை காலை 10.08 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இரு நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 21 பீரங்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் மலேசிய ஆயுதப் படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் எகிப்து அதிபர் ஏற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, மாட்சிமை தங்கிய மாமன்னரைச் சந்தித்த அவர், அரச விருந்திலும் பங்கேற்றார்.
இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக, எகிப்து அதிபருக்கு மலேசியாவின் உயரிய அரச விருதுகளில் ஒன்றான டர்ஜா உத்தாமா மாஹ்கோத்தா நெகாரா (டிஎம்என்) விருதை மாமன்னர் வழங்கினார்.
மேலும், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, இரு நாடுகளின் ஒத்துழைப்பு, வட்டார மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கத் திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் சுமார் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு மலேசியாவுக்கு வருகை தந்துள்ள முதல் எகிப்து அதிபர் எல்-சிசி ஆவார்.
முன்னதாக, 1997ஆம் ஆண்டு நவம்பரில் முன்னாள் எகிப்து அதிபர் முஹமட் ஹோஸ்னி முபாராக் மலேசியா வந்திருந்தார்.
1959ஆம் ஆண்டு முதல் நீடித்து வரும் இரு நாடுகளின் தூதரக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
இதனிடையே 2026 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில், இரு நாடுகளின் மொத்த வர்த்தகம் 74.7 சதவீதம் உயர்ந்து 3.49 பில்லியன் மலேசிய ரிங்கிட்டாக அதிகரித்துள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.








