சவுதி அரேபியாவில் சமயநிந்தனை குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை நாட்டவரை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என அம்னேசிட்டி இண்டர்நேஷனல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
24 வயதான அனோஜன் சிவராசா, இறைத்தூதர் முகமது குறித்து அவமதிக்கும் வகையில் முகநூலில் கருத்து பதிவிட்டதாகக் கூறி கடந்த ஜூலை 1-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அல் அஹ்சா குற்றவியல் நீதிமன்றம், கடந்த ஜூலை 27-ஆம் தேதி அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 லட்சம் சவுதி ரியால் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி கிழக்கு மண்டல அப்பீல் நீதிமன்றம் அந்தத் தண்டனையை மரண தண்டனையாக அதிகரித்தது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டதிலிருந்து ஆரம்பத் தீர்ப்பு வழங்கப்படும் வரை அனோஜன் சிவராசாவுக்கு வழக்கறிஞர் உதவி மறுக்கப்பட்டதாக அம்னேசிட்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகப் பதிவுக்காக ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான கடுமையான நடவடிக்கை என அம்னேசிட்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.








