கடந்த ஆண்டு கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆற்றிய பங்களிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.
மேலும், அந்த ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவதில் அமெரிக்கா தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று நடைபெற்ற ஆசியான் - அமெரிக்கா இடையிலான சிறப்பு உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், கடந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டின் போது தாமும் அன்வாரும் இணைந்து கம்போடியா – தாய்லாந்து இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்படவும், மோதல்களால் இடம்பெயர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் இந்தக் கூட்டு முயற்சி வழிவகுத்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.








