சிப்பாங்கில் நடைபெற்ற F1 பந்தயத்தைக் காண மலேசியாவிற்கு சிறப்பு பயணம் மேற்கொண்ட புருணை சுல்தான் ஹசானால் போல்கியா, தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மீண்டும் புருணை புறப்பட்டார்.
சுல்தான் ஹசானால் போல்கியாவுடன் உடன் இளவரசர் அப்துல் மதீன் போல்கியா மற்றும் அவர்களது குழுவினர் இந்தப் பயணத்தில் இடம்பெற்றிருந்தனர்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் மலேசியா, பாஹ்ரென், புருணை ஆகிய நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் இணைந்து சிப்பாங் சுற்றுப்பாதையில் நடைபெற்ற F1 பந்தயத்தை அவர்கள் நேரில் கண்டு களித்தனர்.
9 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவில் மீண்டும் F1 பந்தயம் நடைபெறுவதால், இந்தப் போட்டியை காண புருணை சுல்தான் சிறப்பு வருகை புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்கள் பயணித்த விமானம் இன்று மாலை 5.30 மணியளவில் மீண்டும் புருணை புறப்பட்டது.
முன்னதாக, சுல்தானுக்கு சிறப்பு சிவப்பு கம்பள வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், ராயல் மலேய் ரெஜிமெண்ட் பர்ஸ்ட் பத்தாலியனைச் சேர்ந்த 28 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பங்கேற்ற மரியாதை அணிவகுப்பும் நடைபெற்றது.








