இந்தோனேசியாவின் பாலி தீவில் இணைய சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 35 இந்தியப் பிரஜைகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் பாலியில் உள்ள இரு தனித்தனி சொகுசு மாளிகைகளில் போலீசார், 39 இந்தியர்களைக் கைது செய்தனர். அவர்களில் 35 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. கடந்த ஆண்டு இறுதி முதல் சுற்றுலா விசாவில் இந்தோனேசியாவுக்குச் சென்ற அவர்கள், இணைய சூதாட்டத் தளத்தை நிர்வகித்ததுடன் பணப் பரிவர்த்தனைகளையும் மேற்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இன்று புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில், நீதிபதி புட்டு ங்டே நொவ்யார்தா பெரும்பாலானோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இருவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தார். தண்டனையை முடித்த பின்னர் அவர்கள் நாடு கடத்தப்படுவதுடன், இந்தோனேசியாவுக்குள் மீண்டும் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.








