ஒட்டாவா: இந்தியா-கனடா உறவு மிக மோசமான நிலைக்குச் சென்று வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று செய்தியாளர்களைச் சந்திக்கும் போது சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. கனடாவில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் என்பவர் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலைக்கு இந்திய ஏஜெண்டகள் காரணம் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இந்த மோதலுக்குக் காரணமாகும். அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது.
கனடா பிரதமர்: இதற்கிடையே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது குறித்து மீண்டும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகள் தொடர்பு இருப்பதாக நம்பகமான குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இந்தியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தக் கனடா இன்னும் உறுதியுடன் இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய ட்ரூடோ, கனடாவும் அதன் நட்பு நாடுகளும் இந்தியாவுடன் தொடர்ந்து நல்லுறவில் இருப்பது மிகவும் முக்கியமானது என்று கூறினார். மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், திடீரென டோனை மாற்றிய ட்ரூடோ இப்படிப் பேசியிருப்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சீரியஸாக இருக்கிறோம்: மாண்ட்ரீலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரூடோ, "சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கனடாவும் அதன் நட்பு நாடுகளும் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாகவும் உறவை கொண்டிருக்க வேண்டும். இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக இருக்கிறது. குறிப்பாக புவிசார் அரசியலில் முக்கிய இடத்தில் இருக்கிறது. இந்தோ-பசிபிக் விவகாரத்தில் நாங்கள் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்குவதில் மிகவும் சீரியஸாக இருக்கிறோம்.