Nov 4, 2025
Thisaigal NewsYouTube
அமெரிக்க முன்னாள் துணை அதிபர் டிக் செனி காலமானார்
உலகச் செய்திகள்

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் டிக் செனி காலமானார்

Share:

வாஷிங்டன், நவம்பர்.04-

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் டிக் செனி காலமானார். அவருக்கு வயது 84.

அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை இரவு நிமோனியா மற்றும் இதயம் தொடர்பான பிரச்னையால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் ஏற்கனவே 5 முறை மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தவர் ஆவார்.

குடியரசு கட்சியைச் சேர்ந்த இவர், ஜார்ஜ் எச் டபிள்யு புஷ் அதிபராக இருந்த போது 1989 முதல் 1993 வரை அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இந்த காலக் கட்டத்தில்தான் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதன் பிறகு, ஜார்ஜ் எச் டபிள்யு புஷ் மகன் ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்த போது 2001 முதல் 2009 ம் ஆண்டு வரை துணை அதிபராக பதவி வகித்தார். அப்போது தலைமை நிர்வாக அதிகாரி போல் செயல்பட்டதுடன், பல முக்கிய முடிவுகளை எடுத்தார்.

செப்டம்பர் 11 ல் அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுர தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கையில் முக்கியப் பங்கு வகித்தார்.

குடியரசு கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பை கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும் கடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் கமலா ஹாரீசுக்கு ஓட்டுப் போட்டதாகவும் பகிரங்கமாக அறிவித்து இருந்தார்.

டிக் செனி மறைவுக்கு அமெரிக்காவில் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related News