இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடத்தப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி க்வாஜா ஷாகித் அலியாஸ் மியா முஜாஹித் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பது ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை நிகழ்த்துவதற்கு பாகிஸ்தான் புகலிடமாக இருந்து வருகிறது. இந்தியாவில் அமைதியை சீர்குலைத்து நாசவேலைகளை நடத்துவதில் பாகிஸ்தானில் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ. தீவிரமாக சதி வேலைகளை செய்து வருகிறது.
இந்த பின்னணியில் பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் அண்மைகாலமாக மர்மமான முறையில் கடத்தப்படுவது, படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. இந்தியாவின் மும்பையில் கொடூர தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மகன், மர்ம நபர்களால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
2008-ம் ஆண்டு மும்பை மீது பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய அஜ்மல் கசாப் உள்ளிட்ட தீவிரவாதிகள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதல்களில் 175 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர் ஹபீஸ் சயீத். பாகிஸ்தானில் பதுங்கியபடி இந்தியாவில் நாசகார சதித் திட்டங்களை நிறைவேற்றிய ஹபீஸ் சயீத் மகன், கமாலுதீன் சயீத் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர் கமாலுதீன் சயீத் உடல்தான் கண்டெடுக்கப்பட்டது. அதேபோல ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி ஒருவரும் பாகிஸ்தான் மண்ணிலேயே போட்டுத் தள்ளப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்திய எதிர்ப்பு பிரசாரகர் தாரீக் ஜமீல் மகன் அண்மையில் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் கொலையாளிகள் யார் என்பது இதுவரை தெரியவில்லை. தாரீக் ஜமீல் பாகிஸ்தானில் இருந்து கொண்டு இந்தியா, இந்துக்களுக்கு எதிராக விஷத்தை கக்கியவர். இந்த தாரீக் ஜமீல் மகன் அஸீம் ஜமீல் மர்ம நபர்களால் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.