சிங்கப்பூர், டிசம்பர்.22-
சிங்கப்பூர் செயிட் ஜோசஃப் தேவாலயத்தில் நேற்று வெடிகுண்டு புரளியை ஏற்படுத்திய 26 வயது தன்னார்வலர் கைது செய்யப்பட்டு, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று அவர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.
சிங்கப்பூர் பிரஜையான அந்த ஆடவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, மனநலப் பரிசோதனைகளுக்கும் உள்ளாக்கப்படவுள்ளார்.
வெடிகுண்டு போல் போலியாக தயாரிக்கப்பட்ட மர்மப் பொருளை தேவாலய வளாகத்தில் வைத்து நாடகமாடிய அவர், தாமே போலீசுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தேவாலயத்தில் நேற்று பிராத்தனைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, அங்கிருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
அதன் பின்னர், வெடிகுண்டு போல் தோற்றமளித்த அந்த மர்ம பொருளை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதோடு, அந்த ஆடவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம், மத ரீதியாக தூண்டப்பட்ட தாக்குதல் அல்லது பயங்கரவாதச் செயல் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதை சிங்கப்பூர் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஐ.நா சபையின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான விதிமுறைகளின் கீழ் அந்த ஆடவருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது 5 லட்சம் சிங்கப்பூர் டாலர் அபராதமோ அல்லது இவை இரண்டுமே விதிக்கப்படலாம்.








