கோலாலம்பூர், டிசம்பர்.21-
தாய்லாந்து - கம்போடியா இடையிலான எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாகக் களம் இறங்கி இரு நாட்டுப் பிரதமர்களுடனும் அதிரடிப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நாளை நடைபெறவுள்ள ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டமானது, இரு நாடுகளும் வெளிப்படையாகப் பேசி பல ஆண்டு காலப் பகையைத் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு மிகச் சிறந்த களமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவ்வட்டாரத்தின் அமைதியையும் நிலைத்தன்மையையும் பாதுகாக்க, இரு நாடுகளும் பிடிவாதத்தைக் கைவிட்டு இருதரப்பு மரியாதை, அறிவுப்பூர்வமான உரையாடல்கள் மூலம் சுமூகமான தீர்வை எட்ட வேண்டும் என அன்வார் வலியுறுத்தியுள்ளார். தென்கிழக்கு ஆசியாவின் அமைதிக்காக அன்வார் எடுத்துள்ள இந்த ஆக்கப்பூர்வமான முயற்சி, ஒரு நியாயமான, நிரந்தரமான தீர்வு கிடைக்க வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.








