வட கொரியா, செப்டம்பர்.13-
தென் கொரியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தொலைக்காட்சி தொடர்களைப் பார்த்தாலோ அல்லது பகிர்ந்தாலோ தனது மக்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு வட கொரியாவில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
நேற்று ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் மன்றத்திடம் தாக்கல் செய்யப்பட்ட 14 பக்கங்கள் உள்ளடக்கிய அறிக்கையில் மனித உரிமை ஆணையம் இதனைத் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் பிரபல K- Drama உட்பட வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களை விநியோகிப்பதற்கான புதிய சட்டங்களின் கீழ் குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான வட கொரியா மக்கள் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் வட கொரியாவிலிருந்து தப்பித்து வந்த 300 க்கும் மேற்பட்ட மக்களைப் பேட்டி கண்டதில் இந்த திடுக்கிடும் தகவல் கிட்டியுள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் மனித உரிமை ஆணையத்தின் இந்த அறிக்கையை வட கொரிய அரசாங்கம் நிராகரித்தது. இந்த அறிக்கையை அங்கீகரித்த ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் தீர்மானத்தை எதிர்ப்பதாக அந்த நாடு குறிப்பிட்டுள்ளது.