Oct 19, 2025
Thisaigal NewsYouTube
அங்கேயும் பேசும் இங்கேயும் பேசும் அமெரிக்கா! பாலஸ்தீனர்கள் பலி, இஸ்ரேலுக்கும் பொறுப்புள்ளதாக கருத்து
உலகச் செய்திகள்

அங்கேயும் பேசும் இங்கேயும் பேசும் அமெரிக்கா! பாலஸ்தீனர்கள் பலி, இஸ்ரேலுக்கும் பொறுப்புள்ளதாக கருத்து

Share:

டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் படைகள் 28வது நாளாக இன்றும் கடும் தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில், பொது மக்களை பாதுகாக்கும் பொறுப்பு இஸ்ரேலுக்கு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் எழுவது இயல்பானதுதான். இப்படி இருக்கையில் 2011க்கு பின்னர் எந்த மோதல் போக்கும் எழவில்லை. ஆனால் கடந்த 7ம் தேதி யாரும் எதிர்பாராத விதமாக ஹமாஸ் படையினர் காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலுக்கு இப்படியான அச்சுறுத்தல் இருப்பது ஏற்கெனவே தெரியும். எனவே அது தனது பாதுகாப்புக்காக 'அயன் டோம்' அமைப்பை உருவாக்கி வைத்திருந்தது. சோகம் என்னவெனில் இந்த வலுவான தடுப்பையும் மீறி ஹமாஸ் ஏவிய ராக்கெட்கள் இஸ்ரேலுக்குள் பாய்ந்தது. இதில் 1,400 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கான பதில் தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப்படை தொடங்கியுள்ளது. ஹமாஸை அழிப்பதாக கூறி கடந்த 27 நாட்களாக இஸ்ரேல் விமானப்படை கடுமையான தாக்குதலை தொடுத்து வந்தது. 28வது நாளாக இன்றும் இது நீடிக்கிறது. இந்த கொடூர தாக்குதலில் 9,061 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த 26ம் தேதி வரை வான் வழி தாக்குதலில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் அதன் பின்னர் தரைவழி ஊடுருவலை தொடங்கியது. போர் தீவிரமடைந்த நிலையில் சமாதான பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின.

இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவும், சீனாவும் தீர்மானங்களை முன்வைத்தன. ஆனால் இந்த தீர்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்துவிட்டது. இதன்பின்னர் கடந்த 25ம் தேதியன்று நடைபெற்ற ஐநா பொதுக்குழு கூட்டத்தில் போர் நிறுத்தம் குறித்து ஜோர்டன் சார்பில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இதன் மீது மொத்தமுள்ள 195 நாடுகளும் தங்கள் கருத்தை பதிவு செய்தன. அதில் 14 நாடுகள் எதிராகவும், இந்தியா உள்ளிட்ட 45 நாடுகள் தீர்மானத்திற்கு வாக்களிக்காமலும் புறக்கணித்தன. மற்ற நாடுகள் வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை இஸ்ரேல் மதிக்க வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் தற்போது வலியுறுத்தியுள்ளது. கடந்த 27ம் தேதி வரை வான்வழி தாக்குதலில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதலில் மும்முரமாக இறங்கியுள்ளது. பொதுமக்களின் கார்களை பீரங்கி கொண்டு சுட்டு வீழ்த்துவதை போன்ற வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இது இஸ்ரேலின் கொடூர முகத்தை காட்டுவதாக பாலஸ்தீன ஆதரவு நாடுகள் விமர்சித்துள்ளன. இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலை நியாப்படுத்தும் விதமாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Related News