கோலாலம்பூர், நவம்பர்.12-
டில்லியில் கடந்த திங்கட்கிழமை நடந்த கார் வெடிப்புச் சம்பவத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்பது உறுதியாகும் பட்சத்தில், கடுமையான கண்டனத்திற்கு உரியது என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவி உயிர்களைக் குறி வைத்து, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் இது போன்ற வன்முறைச் சம்பவத்தில் எந்த ஒரு நியாயமும் இல்லை என்றும் அன்வார் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கான ஆணி வேரைக் கண்டறிந்து, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளைத் தாம் பாராட்டுவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.








