கொழும்பு, டிசம்பர்.23-
புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 4 ஆயிரம் கோடி ரூபாய்) நிதியுதவி வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.
அண்மையில் டிட்வா புயல் காரணமாக இலங்கை கடுமையாகக் பாதிக்கப்பட்டது. நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இக்கட்டான சூழ்நிலையில் இந்திய மீட்புப் படையினர் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி இந்தியா உதவி செய்து இருந்தது. இந்நிலையில், பாதிப்புகளை நேரில் பார்வையிட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித் ஹெராத்துடன் பேச்சு நடத்தினார். இருநாட்டு தலைவர்களும் டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவுடனும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 450 மில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா வழங்கும். இதில் 350 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 4 ஆயிரம் கோடி ரூபாய்) சலுகையுடன் கடன் மற்றும் 100 மில்லியன் டாலர் மானியம் அடங்கும்.
இந்த நிதி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளுக்கும், சாலை, ரயில் மற்றும் சேதம் அடைந்த பாலங்களை சரி செய்ய பயன்படுத்தப்படும். 2022ம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வந்துகொண்டிருந்த நிலையில், இந்த இயற்கை பேரிடர் புதிய சிரமங்களை உருவாக்கியுள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டு வருபவதற்கு இலங்கையுடன் இணைந்து செயல்படுமாறு பிரதமர் மோடி எங்களுக்கு அறிவுறுத்தினார் என்று ஜெய்சங்கர் கூறினார்.








